கோட்டயம், ஜூன் 2: சமூக வலைதளங்களில், 50 பெண்களுடன் தொடர்பு கொண்டு, அவர்களை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்ததாக, கேரளாவைச் சேர்ந்த 25 வயது வாலிபர் கைது செய்யப்பட்டான். கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது.

இங்குள்ள கோட்டயம் மாவட்டம், அரிபரம்பு பகுதியைச் சேர்ந்த, பிரதீஷ் குமார், 25, கைது செய்யப்பட்டுஉள்ளான். இவன், சமூக வலைதளங்களில், பெண்களை தொடர்பு கொண்டு, மாற்றம் செய்யப்பட்ட அவர்களது புகைப்படங்களை காட்டி, அவர்களை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டான்.

இது குறித்து, போலீசார் கூறியதாவது:பிரதீஷ் குமார், சமூக வலைதளங்களில், பெண்களுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொள்வான். அதிலும், திருமணமான பெண்களுடன், அவன் பழக்கம் ஏற்படுத்திக் கொள்வான். அந்தப் பெண்களின் குடும்ப சூழ்நிலை, கணவர் குறித்த விபரங்களை சேகரித்து கொள்வான்.பின், அந்த பெண்களின் கணவர்களுடன், சமூக வலைதளத்தில், தன்னை பெண்ணாகக் காட்டி பழகுவான்.

இவ்வாறு அந்த ஆண்களுடன், சமூக வலைதளத்தில் நடக்கும் தகவல் பரிமாற்றங்களை, அந்த பெண்களிடம் காட்டுவான்.மற்றொரு பெண்ணுடன் தன் கணவருக்கு தொடர்பு இருப்பதை அறிந்து, அந்த பெண்கள் அதிர்ச்சி அடைவர்.
அப்போது, அந்த பெண்ணுக்கு ஆறுதல் கூறுவது போல், தொடர்பை வலுப்படுத்திக் கொள்வான். இதை பயன்படுத்தி, அந்த பெண்களின் புகைப்படங்களை வாங்கி, அவற்றை திரித்து, ஆபாச படமாக்கிக் கொள்வான்; அவற்றை காட்டி, அந்தப் பெண்களை மிரட்டுவான்.

தன்னுடைய கட்டுப்பாட்டில் அந்த பெண் வந்ததை உணர்ந்ததும், பாலியல் பலாத்காரம் செய்வான். இதற்கு, அந்த பெண் உடன்படாவிட்டால், அந்த பெண்ணின் திரிக்கப்பட்ட படத்தை, கணவருக்கு அனுப்பி வைப்பான்.

இது தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில், அவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த வழியில், அவன், 50 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளது, விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் போலீசார் அந்த வாலிபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இவ்வாறு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது