சென்னை, ஜூன் 2:  கோட்டை ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் பாராங்கல்லை வைத்து மின்சார ரெயிலை கவிழக்க சதி செய்த மர்ம நபர்களை ரெயில்வே போலீசார் தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: நேற்று முன்தினம் நள்ளிரவில் தாம்பரத்தில் இருந்து கடற்கரை செல்லும் மார்கத்தில் மின்சார ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் எழும்பூர் ரெயில் நிலையம் தாண்டி கோட்டை ரெயில் நிலையம் செல்லும் போது அங்கு தண்டவாளத்தில் பாராங்கல் ஒன்று வைக்கப்பட்டு இருந்ததை ரெயில் ஓட்டுனர் பார்த்துள்ளார்.

உடனடியாக ரெயிலை நிறுத்திய அவர் இது குறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அந்த கல்லை அகற்றிய பிறகு ரயில் புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. மின்சார ரெயிலின் ஓட்டுனர் சரியான நேரத்தில் ரெயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள எழும்பூர் ரயில்வே போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தண்டவாளத்தில் கல்லை வைத்த மர்ம நபர்கள் யார் ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.