சென்னை, ஜூன் 3: 2019-2020-ம் கல்வியாண்டிற்கு 2,3,4,5,7,8,10 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டுள்ள பாடப்புத்தகங்களை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 77.48 லட்சம் மாணாக்கர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக 8 மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று வழங்கினார்.

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணாக்கர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.  மாணாக்கர்களது புத்தகச் சுமையினை குறைக்கும் நோக்கத்தோடு 2012-2013 கல்வியாண்டில் முப்பருவ கல்வி முறை தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் பருவம் ஜூன் மாதத்திலும், இரண்டாம் பருவம் அக்டோபர் மாதத்திலும், மூன்றாம் பருவம் ஜனவரி மாதத்திலும் துவங்குகிறது. பாடப்புத்தகங்கள் ஒவ்வொரு பருவத்தின் துவக்க நாளன்றே மாணக்கர்களுக்கு வழங்கப்படுகிறது.

மாணவர்களின் முழுமையான ஆளுமைத் திறனை வளர்த்திடவும், செயல்வழி கற்றல் முறை மற்றும் படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும் வகையிலும், சிந்தனைத் திறனை வெளிக்கொணரும் வகையிலான மதிப்பீட்டு முறையை உள்ளடக்கியும், உலகளாவிய அறிவியல் தொழில்நுட்ப மாற்றங்களுக்கேற்ப கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கான சவால்களை மாணவ, மாணவிகள் உறுதியோடு எதிர்கொள்ளும் வகையிலும், தமிழ்நாடு அரசு மிகச்சிறந்த கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்களை கொண்ட வல்லுநர் குழுவினை அமைத்து, புதிய பாடத்திட்டமும், பாடநூல்களும் உருவாக்கப்பட்டது.

தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தால் அச்சிடப்பட்ட 1,6,9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கான பாடநூல்கள் 4.5.2018 அன்று வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 2019-2020-ம் கல்வியாண்டிற்கு ரூ.195.25 கோடி செலவில் 2,3,4,5,7,8, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டுள்ள பாடப்புத்தகங்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கூறியதாவது:-  புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்ட புத்தகத்தில் உள்ள பாடங்களை படிக்க 220 நாட்கள் தேவைப்படுகிறது. அதனை கருத்தில் கொண்டுதான் இன்றே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.  அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் இன்றே வழங்கப்படும். மத்திய அரசால் நடத்தப்படும் எந்த போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ளும் ஆற்றல் பெறுகின்ற வகையில் இந்த புதிய பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே கல்வித் துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கின்ற வகையில் பல்வேறு நடவடிக்கைகளையும், மாற்றங்களையும் இந்த அரசு மேற்கொண்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் கூறினார்.  இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா.வளர்மதி, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர்பிரதீப் யாதவ், மேலாண்மை இயக்குநர் எஸ்.ஜெயந்தி, பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன், தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் சி.உஷா ராணி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் உறுப்பினர் செயலர் எம்.பழனிசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.