சென்னை,ஜூன் 3: அதிமுக ராஜ்யசபா சீட் பெறுவதில் தமிழ்மகன் உசேன், அன்வர் ராஜா ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
வரும் ஜூலை மாதம் தமிழகத்தில் 6 ராஜ்யசபா இடங்கள் காலியாகி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு தலா 3 இடங்கள் கிடைக்கும். திமுகவை பொறுத்தவரை 3 இடங்களில் 1 இடத்தை வைகோவை ராஜ்யசபா வழங்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

அதே போன்று அதிமுக 3 ராஜ்யசபா பதவிகள் கிடைக்கவுள்ள நிலையில், அதில் ஏற்கனவே மக்களவை தேர்தலின் போது செய்து கொண்ட கூட்டணி ஒப்பந்தத்தின்படி பாமகவிற்கு 1 ராஜ்யசபா வழங்க அதிமுக தெரிவித்துள்ளது. தற்போது வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜெய்சங்கரை தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா பதவிக்கு தேர்ந்தெடுக்க பிஜேபி திட்டமிட்டுள்ளது. மீதமுள்ள 2 ராஜ்யசபா இடங்களில் 1 இடத்தை பிஜேபி தங்களுக்கு அதிமுக ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

ஆனால் 3 ராஜ்யசபா பதவிகளை யாருக்கும் ஒதுக்காமல் அதிமுகவினரே ஒதுக்க வேண்டும் என மூத்த தலைவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஆகியோர் ஏற்கனவே முதல்வரை நேரில் சந்தித்து ராஜ்யசபா சீட் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்திள்ளனர். மேலும் சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தனது ராஜ்யசபா சீட் வழங்க வேண்டும் என அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் தமிழ் மகன் உசேனும் கடந்த வாரம் முதல்வர் எடப்பாடியை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ் மகன் உசேன் கூறுகையில்: எம்ஜிஆர் அதிமுக தொடங்குவதற்கு முன்பாக அவரது ரசிகர் மன்றத்தில் இருந்து, அதிமுக தொடங்கிய காலம் வரை இன்று வரை தலைமைக்கு விசுவாசமாக இருந்து வருகிறேன். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் எனக்கு கட்சியில் முக்கியத்துவம் அளித்தனர். தற்போது தமிழகத்தில் சிறுபான்மையினர் அதிமுகவிற்கு எதிராக உள்ளதாக மாய தோற்றத்தை திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் உருவாக்கி வருகின்றனர்.

அந்த மாய தோற்றத்தை உடைக்கும் வகையில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த எனக்கு ராஜ்யசபா சீட் அளித்தால், சிறுபான்மையினர் பாதுகாக்கும் கட்சி அதிமுக என்பது நிரூபணம் ஆகும். என்றார். அதே போன்று ராஜ்யசபா உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அன்வர்ராஜா விண்ணப்பம் செய்துள்ளது குறிப்பிடதக்கது.