புதுடெல்லி, ஜூன் 3: இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம் அளித்த இஃப்தார் விருந்தில் பங்கேற்க வந்த விருந்தினர்களுக்கு பாகிஸ்தான் அதிகாரிகள் பெரும் தொல்லையை கொடுத்தது தொடர்பாக இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் இந்திய தூதரகம் அமைந்துள்ளது.

ரம்ஜான் பண்டிகையையொட்டி தூதரகத்தின் சார்பில் செரீனா ஹோட்டலில் சனிக்கிழமை மாலை இஃப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், கலந்து கொள்ளுமாறு பாகிஸ்தான் முழுவதிலிருந்தும் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.  இஃப்தார் விருந்தில் கலந்து கொள்ள வந்தவர்களை போலீஸார் சோதனை என்ற பெயரில் தகாத முறையில் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. மேலும், சிலரை ஏதேனும் ஒரு சாக்குப்போக்கு சொல்லி அவர்களை விரட்டியடித்தாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியா கூறும்போது: இந்த இஃப்தார் விருந்தில் இன்னும் சில விருந்தினர்கள் பங்கேற்க முடியாமல் போய்விட்டது. அழைப்பை ஏற்று வந்து இன்னலுக்கு ஆளானவர்களிடம் மன்னிப்பு கோர கடமைப்பட்டுள்ளேன்.

பாகிஸ்தான் அதிகாரிகளின் கெடுபிடிகளுக்கு பயந்து மேலும் சில நண்பர்கள் இந்த விருந்துக்கு வரவே இல்லை என்று தெரிவித்தார். இஃப்தார் விருந்தினர்களை பாகிஸ்தான் அதிகாரிகள் நடத்திய விதம் அருவருக்கத்தக்க செயல் என பாகிஸ்தானுக்கான இந்திய தூதரகம் தெரிவித்தது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் இந்திய தூதரகம் கோரியது.