செங்குன்றம், ஜூன் 3: மாநகராட்சி அலுவலக கட்டிடத்தின் 2-வது மாடியிலிருந்து தவறி விழுந்து துப்புரவு தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராஜமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் அருகே அமைந்துள்ள சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளியாக இருந்தவர் சீனிவாசன் (வயது 44). இவரது உறவினர்கள் ஆந்திராவில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இவர் இரவு நேரத்தில் அலுவலக கட்டிடத்திலேயே படுத்துறங்கி வருவதாக தெரிகிறது.

இதேபோல், நேற்றிரவு அலுவலக கட்டிடத்தின் 2-வது மாடியில் தூங்கிக்கொண்டிருந்துள்ளார். அப்போது, திடீரென தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
இது குறித்து, ராஜமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.