புதுடெல்லி, ஜூன் 3: இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக சுஷ்மா ஸ்வராஜ் முன்பு பதவி வகித்த காலத்தில், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு சமூகவலைதளங்கள் வாயிலாக உதவி செய்ததைப் போல புதிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் உதவி செய்யத் தொடங்கியுள்ளார்.

முந்தைய அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் பதவி வகித்தார். சுட்டுரை, முகநூல் மூலம் வெளிநாடுகளில் வாழும் இந்தியத் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் அவரைத் தொடர்பு கொண்டு உதவி கேட்பது வழக்கம். இதற்கு சமூகவலைதளங்களில் பதில் அளிப்பதுடன், வெளிநாடுகளில் இருக்கும் இந்திய தூதரகங்கள் மூலம் உதவிகள் கிடைக்கவும் சுஷ்மா ஸ்வராஜ் நடவடிக்கை எடுப்பார்.

இந்த சூழ்நிலையில், புதிய அரசில் முன்னாள் வெளியுறவுத் துறை செயலர் எஸ். ஜெய்சங்கர் வெளியுறவு அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அவரும் சுஷ்மா வழியில் சமூகவலைதளங்கள் வாயிலாக வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களுக்கு உதவிகள் செய்யத் தொடங்கியுள்ளார்.

சுட்டுரையில் மகாலட்சுமி என்பவர் இத்தாலிக்கு சென்ற தமது பெற்றோர் கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) தொலைத்துவிட்டு துன்பப்படுவதாகவும், அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என ஜெய்சங்கருக்கு கோரிக்கை விடுத்து செய்தி அனுப்பியிருந்தார்.

இதற்கு ரோமில் உள்ள இந்தியத் தூதரகம், முனிச்சில் உள்ள துணை தூதரகம் ஆகியவை தேவையான உதவிகளை அளிக்கும், சுட்டுரையில் உள்ள அந்த தூதரகங்களின் முகவரியை தொடர்பு கொள்ளும்படி ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார்.
குவைத்தில் இருக்கும் தமது கணவரை கண்டுபிடித்து, இந்தியாவுக்கு அழைத்து வரும்படி பெண் ஒருவர் செய்தி அனுப்பியிருந்தார். இதற்கு ஜெய்சங்கர், குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகம், அதுதொடர்பான பணியில் ஏற்கெனவே ஈடுபட்டிருப்பதாக பதிலளித்துள்ளார்.

முன்னதாக, சுட்டுரையில் ஜெய்சங்கர் வெளியிட்ட முதல் பதிவில், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு உதவி செய்வதில் சுஷ்மா ஸ்வராஜ் வழியை பின்பற்றுவதில் பெருமைப்படுகிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்திய வெளியுறவுத் துறை செயலராக கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலும் ஜெய்சங்கர் பதவி வகித்தார்.