விழுப்புரம், ஜூன். 3: விழுப்புரம் மாவட்டத்தில் மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சிய 23 மின் மோர்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பேரூராட்சியில் வீட்டின் குடிநீர் குழாயில் மின் மோட்டார்கள் பொருத்தி குடிநீரை உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டக்குப்பம் பேரூராட்சி செயல் அலுவலர் ராமலிங்கம் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த நிலையில் கோட்டக்குப்பத்தில் பெரும்பாலான வீடுகளில் திருட்டுத்தனமாக மின் மோட்டார்களை பொருத்தி குடிநீரை உறிஞ்சுவதாக பேரூராட்சி அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ராஜா, விழுப்புரம் உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், கோட்டக்குப்பம் பேரூராட்சி செயல் அலுவலர் ராமலிங்கம் ஆகியோர் கோட்டக்குப்பம் கிராமத்தில் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்தனர்.

இதில் 23 வீடுகளில் மின்மோட்டார்கள் மூலம் குடிநீரை உறிஞ்சியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த மின்மோட்டார்களை பறிமுதல் செய்து வீட்டின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.