சென்னை, ஜூன் 3:  வேக்கம் சேலஞ்ச் என்ற பெயரில் ஆபத்தான சவாலை சிறுவர்கள் உட்பட பலரும் செய்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு சவால்கள் வைராகி, அவற்றில் பல ஆபத்துகளில் முடிவது இன்றைய உலகில் புதிதல்ல என்றாகிவிட்டது. இதுவரை சமூக வலைதளங்களில் உலா வந்து வைரலான  டென் (10 ஆண்டு சவால்) இயர்ஸ் சேலஞ்ச், மோமோ சேலஞ்ச், கிகி சேலஞ்ச் ஆகியவற்றின் வரிசையில் தற்போது வேக்கம் சேலஞ்ச் என்னும் புதிய பூதம் உருவாகி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

உலகின் பல்வேறு பகுதியில் வாழும் மக்களும் இந்த சவால்களை ஏற்றுக்கொண்டும் தங்களது புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அதன்படி, ஒரு பெரிய பிளாஸ்டிக் பையில் ஒருவர் அமர்ந்து கொண்ட உடன், அந்த பைக்குள் வேக்கம் க்ளினரின் பைப்பை விட்டு, மற்றொருவர் ஆன் செய்கிறார். சிறிது நேரத்தில் பைக்குள் இருக்கும் நபரின் உடலை, பிளாஸ்டிக் பை இறுக்குகிறது.

கரணம் தப்பினால் மரணம் என்பதை உணர்ந்து விபரீதம் விளைவிக்கும் இத்தகைய சேலஞ்சுகளை தவிர்த்து நல்ல செயல்களில் கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.