வார்சா, ஜூன் 4:  போலந்து நாட்டைச் சேர்ந்த 11 வயது சிறுமி உருக்கமான கடிதம் ஒன்றை பிரதமர் மோடிக்கு எழுதியுள்ளார்.

போலந்து நாட்டைச் சேர்ந்தவள் சிறுமி அலிக்ஜா வனாட்கோ (வயது 11). தனது தாயுடன் கோவாவில் தங்கியிருந்தார். விசா காலம் முடிவடைந்த பின்னரும் தங்கியதாக அவளது தாய் மார்த்தா இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டார்.

ஆதரவின்றி இருந்த சிறுமியை அழைத்துச் செல்வதற்காக மார்த்தாவுக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதியை இந்திய வெளியுறவுத்துறை வழங்கியது. இதனைத் தொடர்ந்து சிறுமி அலிக்ஜா கடந்த மார்ச்சில் தாயுடன் தாயகம் திரும்பினார்.

இந்த நிலையில் மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுள்ள மோடிக்கு தனது வாழ்த்துக்களை கூறி கடிதம் ஒன்றை மிகவும் உருக்கமாக சிறுமி எழுதியுள்ளாள்.
அந்த கடிதத்தில், ‘நான் கோவாவை மிகவும் நேசிக்கிறேன். அங்குள்ள விலங்கு சரணாலயத்தில் இணைந்து தன்னார்வ தொண்டு செய்து வந்தேன். தற்போது அதனை இழந்துவிட்டேன்’ என்று தெரிவித்துள்ளாள்.

மேலும் தனது தாயுடன் அங்குள்ள கேதர்நாத் கோவிலுக்கு சென்று வந்த அனுபவம் குறித்தும், தங்களது விசாவை கருப்புப்பட்டியலில் இருந்து நீக்கவும் கோரிக்கை விடுத்துள்ளாள். பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் கடிதம் எழுதியுள்ளாள்.

இந்த கடிதத்தினை அவளது தாய் மார்த்தா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சிறுமியின் கையெழுத்துடன் உள்ள அந்த கடிதம் படிப்பவர்களை நெகிழ்ச்சியடைய செய்கிறது.