சென்னை, ஜூன் 4: தமிழகத்தில் மின்கட்டணம் உயரப்போவதாக வெளியான ஊடக செய்திகளை மின்சார வாரியம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. தற்போதைக்கு மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் எதுவும் இல்லையென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மின்கட்டணம் 30% வரை உயர்த்தப்படலாம் என சில பத்திரிகைகளில் தகவல் வெளியானது. மின் கட்டணம் சில ஆண்டுகளுக்கு முன்பு உயர்த்தப்பட்டது. பல்வேறு பராமரிப்புச் செலவுகள் அதிகரித்து, காற்றாலை மின் உற்பத்தி குறைந்துள்ள நிலையில், மின்சாரக் கட்டணத்தை உயர்த்த மின் வாரியம் திட்டமிட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் மின் கட்டணம் தற்போதைய நிலையிலிருந்து 30 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக அந்த செய்திகள் தெரிவித்திருந்தன.

மின் கட்டணம் உயர்த்தப்படுவதால் ரூ. 20 ஆயிரம் கோடி அளவுக்கு மக்கள் மீது கட்டண உயர்வு திணிக்கப்பட உள்ளதாகவும், இதனால் விவசாயிகள், ஏழை, எளிய மக்கள் மற்றும் நடுத்தரப்பிரிவு மக்கள் என அனைத்துப் பிரிவினரும் பாதிக்கப்படுவார்கள் என அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.

நாடாளுமன்ற தேர்தல் வராமல் இருந்திருந்தால் முன்னரே கட்டணத்தை உயர்த்துவது குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டு இருக்கும். தற்போது நாடாளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில், அரசு விரைவில் மின் கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிடும் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. மின் கட்டணத்தை இரண்டு விதமாக உயர்த்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மின்கட்டண உயர்வு தொடர்பாக ஊடகத்தில் வெளியான செய்திகளை மின் வாரியம் மறுத்துள்ளது. மின் கட்டணத்தை உயர்த்தும் பேச்சுக்கே இடமில்லை என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

பொதுவாக மின் கட்டணத்தை எடுத்த எடுப்பில் உயர்த்தி விட முடியாது. மின்சாரக் கட்டணத்தை உயர்த்துகின்ற எண்ணம் அரசுக்கு இருந்தால், அதற்கு பல விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியிருக்கும். மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக மக்களிடம் கருத்து கேட்புக் கூட்டங்கள் நடத்தப்படும். அந்தக் கூட்டங்களில் தெரிவிக்கப்படும் கருத்துக்களின் அடிப்டையில் மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல் பெற வேண்டும். மக்களின் கருத்தைக் கேட்காமல் மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலைப் பெற முடியாது. மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே மின் கட்டணத்தை மாற்றியமைக்கவோ அல்லது உயர்த்தவோ சாத்தியக்கூறுகள் ஏற்படும்.

அந்த வகையில், மக்களிடம் எந்தவிதமான கருத்துக் கேட்புக் கூட்டங்களும் நடத்தப்படவில்லை. அந்த எண்ணமும் மின்சார வாரியத்திடம் இல்லை. ஏற்கனவே மக்களுக்கு 100 யூனிட் அளவுக்கு கட்டணம் வசூலிக்கப்படாமல் அதனை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும் விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கு இலவச மின்சாரமும் வழங்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சியில் கடனில் தத்தளித்துக் கொண்டிருந்த மின்சார வாரியத்தை அதிமுக அரசு தூக்கி நிறுத்தி மின்வாரியத்தை சிறப்பாக நடத்தி வருகிறது.

எனவே மின்கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக வெளியான செய்தியில் எந்த உண்மையும் இல்லை, அது குறித்த அவசியமும் இப்போது எழவில்லை. எனவே, மின்கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் தவறான, அடிப்படையற்றது.

இவ்வாறு மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.