சென்னை, ஜூன் 4: அன்பு, அமைதி, சகோதரத்துவம் தழைத்திட வேண்டுமென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள ரம்ஜான் வாழ்த்துச் செய்தியில் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர்விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் எனது அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

புனித ரமலான் மாதத்தின் முப்பது நாட்கள் இஸ்லாமியப் பெருமக்கள் பகலில் உணவு உண்ணாமலும், நீர் பருகாமலும் இறை உணர்வோடு நோன்பிருந்து, ஏழை மக்களின் பசியாற உணவு அளித்து, அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற்று இன்புற்று வாழ்ந்திட இறைவனை தொழுது, ரம்ஜான் திருநாளை உற்சாகமாக கொண்டாடுவார்கள்.

இஸ்லாமியப் பெருமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க தமிழ்நாடு முழுவதும் உள்ள 3000-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களுக்கு 5,145 மெட்ரிக் டன் அரிசி வழங்கியது, 2018-ஆம் ஆண்டு முதல் இஸ்லாமியப் பெருமக்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக ஆண்டுதோறும் 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது, ஹஜ் குழுவிற்கு வழங்கப்பட்டு வரும் நிர்வாக மானியத்தை 30 லட்சம் ரூபாயிலிருந்து 50 லட்சம் ரூபாயாக உயர்த்தியது, நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவிற்கு தேவைப்படும் சந்தனக்கட்டைகளை ஆண்டுதோறும் வழங்குதல், மாவட்ட காஜிக்கள் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு ஆற்றி வரும் சமூகப் பணிகளை கருத்தில் கொண்டு மாதந்தோறும் 20,000 ரூபாய் மதிப்பூதியம் வழங்கும் திட்டம், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினருக்கு நேரடி நியமன முறையில் நிரம்பாத பணியிடங்களுக்கு முன்கொணர்வு முறை நீட்டிக்க அரசாணை வெளியிட்டது, தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு வழங்கப்பட்டு வந்த ஆண்டு நிர்வாக மானியத்தை 2 கோடி ரூபாயாக உயர்த்தியது, உலமாக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியத்தை 1500 ரூபாயாக உயர்த்தியது, பள்ளிவாசல்கள், தர்காக்கள் போன்ற வக்ஃப் நிறுவனங்களில் பழுதுபார்ப்பு மற்றும் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள 3 கோடி ரூபாயில் தொகுப்பு நிதி உருவாக்கியது போன்ற பல்வேறு நலத்திட்டங்களை ஜெயலலிதா வழியில் செயல்டும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

இப்புனித ரமலான் பெருநாளில், உலகில் அன்பும், அமைதியும், சகோதரத்துவமும் தழைத்திட வேண்டும் என்று இறைவனை வேண்டி, என் அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது உளமார்ந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.