நாட்டிங்காம், ஜூன் 4: இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் அணி, தனது வெற்றிக்கணக்கை தொடங்கியதுடன், பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளது.

இங்கிலாந்திற்கு எதிராக நாட்டிங்காம்மில் நேற்று நடந்த உலகக்கோப்பை லீக் போட்டியில், 14 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 348 ரன்கள் குவித்தது. இதன்மூலம் உலகக்கோப்பை வரலாற்றில், பாகிஸ்தான் அணி 6-வது முறையாக 300 ரன்களை கடந்துள்ளது. மேலும், இதுவரை 300 ரன்களை கடந்த அனைத்துப் போட்டிகளில் பாகிஸ்தான் அணி வெற்றிக்கண்டுள்ளது கவனிக்கத்தக்கது.

இந்தபோட்டியில் 84 ரன்கள் அடித்ததுடன், ஒரு விக்கெட்டை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார், பாக் வீரர் முகமது ஹபீஸ், இதன்மூலம், உலக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த பாகிஸ்தான் வீரர்களின் பட்டியலில் முகமது ஹபீஸ் 4-ம் இடத்தை பிடித்தார். ஒருநாள் தொடரில் இவரின் 38-வது அரைசதம், இங்கிலாந்துக்கு எதிராக இவரின் 4-வது அரைசதம் இதுவாகும். இதேபோல் மற்றொரு வீரர் பாபர் ஆசாமும் இந்த போட்டியில் அரைசதம் அடித்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.