மந்திரிசபை முடிவுகளை 10 நாட்களுக்கு அமல்படுத்தக்கூடாது: புதுச்சேரி அரசுக்கு கோர்ட் தடை

தமிழ்நாடு முக்கிய செய்தி

புதுடெல்லி, ஜூன் 4: புதுச்சேரி அமைச்சரவையில் நிலம், நிதி தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகளை அமல்படுத்த 10 நாட்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அதிகார சர்ச்சை தொடர்பாக கவர்னர் கிரண்பேடி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் தலையிட கவர்னருக்கு அதிகாரம் இல்லை என சென்னை ஐகோர்ட் ஏப்ரல் 30-ந் தேதி விதித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அமல்படுத்தக்கூடாது என்றும் கவர்னர் கிரண்பேடி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கிரண்பேடியின் கோரிக்கையை நிராகரித்தனர்.

தொடர்ந்து, புதுச்சேரி அமைச்சரவை கூட்டத்தில் நிலம், நீர் தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகளை 10 நாளுக்கு அமல்படுத்த வேண்டாம் என உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகள் இந்து மல்கோத்ரா, எம்.ஆர்.ஷா ஆகியோரை கொண்ட பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்தது. அடுத்தகட்ட விசாரணையை 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

புதுச்சேரி அமைச்சரவை கூட்டம் 7-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள உத்தரவு குறிப்பிடத்தக்கது.

இது குறித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில், கவர்னர் கிரண்பேடியின் செயல்பாட்டால் தான் புதுச்சேரி மக்கள் மக்களவை தேர்தலில் எங்கள் வேட்பாளரை சுமார ¢2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்துள்ளனர் என்றார்.