சென்னை, ஜூன் 4: பிளஸ்-2 பொதுத்தமிழ் பாடபுத்தகத்தின் அட்டை படத்தில் பாரதியார் காவி தலைப்பாகை அணிந்துள்ள விவகாரத்தில் தேவையற்ற சர்ச்சை உண்டாக்கப்படுகிறது என்றும், தேசியக் கொடியின் நிறத்தில் தலைப்பாகை இருப்பது தேசப்பற்றை பரப்பவே என்றும் பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

பிளஸ்-2 பொதுத்தமிழ் பாடபுத்தகத்தின் அட்டை படத்தில் பாரதியார் காவி நிறத்தில் தலைப்பாகை அணிந்திருப்பது போன்ற ஓவியம் இடம்பெற்றது. இது காவியைப் பரப்பும் செயல் என திமுகவைச் சேர்ந்த முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அளித்துள்ள விளக்கத்தில், தேசியக் கொடியில் உள்ள முதல் நிறமே பாரதியார் தலைப்பாகையில் இடம்பெற்றுள்ளது. இது தேசப்பற்றை பரப்புவது ஆகும்.

மதத்தையோ, மதம் சார்ந்த மற்றவற்றையோ பரப்புவதாக இதை அர்த்தம் கொள்ளக் கூடாது. இந்த விஷயத்தில் தேவையற்ற சர்ச்சையை உண்டாக்க வேண்டாம். இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை. இதை விவாதப் பொருளாக ஆக்குவது தவறு என கூறப்பட்டுள்ளது.

மேலும் பாடநூல் கழக தலைவர் வளர்மதி கூறுகையில், காவி மயமாக்கும் எண்ணத்தில் இவ்வாறு வெளியிட்டதாக கருதுவது தவறு. இது மாநில அரசு வெளியிட்ட புத்தகம். கல்வித்துறையில் அரசியலோ, மதமோ விளையாடுவதற்கு இடம் இல்லை என்று கூறினார்.