சென்னை, ஜூன் 4: திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் உள்ள கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தினால், பல கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாயின.

சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் அருண் (வயது 57). இவர், குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் பொறியியல் நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். இதில், 60 பேர் பணியாளர்களாக உள்ளனர். காருக்கு தேவைப்படும் உதிரிபாகங்கள் இங்கு தயாரிக்கப்படுகிறது. இவற்றை, பிரபல கார் கம்பெனிக்கு விநியோகித்து வருகின்றனர்.

இதனால், பகல், இரவு என சுழற்சிமுறையில் பணியாளர்கள் இங்கு பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். வழக்கம்போல், நேற்றிரவும் 5 ஊழியர்கள் இரவுப்பணியில் இருந்துள்ளனர். இந்த நிலையில், இன்று அதிகாலை 5 மணியளவில் திடீரென பயங்கர சத்ததுடன் ஏதோ ஒன்று வெடித்துள்ளது. இதனால், பதறிப்போன ஊழியர்கள் தலைத்தெறிக்க வெளியில் ஓடிவந்துள்ளனர். அடுத்த கணம் நிறுவனத்தின் ஒரு பகுதியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இது குறித்த தகவலின்பேரில், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த 4 தீயணைப்பு வாகனங்களில் இருந்து வந்த வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அதற்குள் தீ மளமளவென பரவி நிறுவனம் முழுவதையும் ஆக்கிரமித்துக்கொண்டது. பல மணிநேரம் போராடி தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகி உள்ளன. இது குறித்து, குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு பார்வையிட்டு மின்கசிவு காரணமா? அல்லது வேறு ஏதும் காரணங்களால் தீவிபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.