சென்னை, ஜூன் 4: தமிழக போக்குவரத்து கழகங்களில் கூடுதலாக 1500 பேருந்துகள் விரைவில் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை. கோவை, மதுரை ஆகிய பெருநகரங்களில் சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்காத மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
போக்குவரத்துத்துறை அமைச்சர்எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம், தலைமைச் செயலகத்தில், இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் தொடங்கி வைத்த புதிய பேருந்துகளின் இயக்கம் மற்றும் வசூல் நிலவரம், கிராமப்புற மக்களின் போக்குவரத்துத் தேவைகளை ஈடு செய்கின்ற வகையில் கூடுதல் பேருந்துகளை இயக்குதல், சுற்றுச்சூழல் மாசுப்படுவதை குறைக்கின்ற வகையில், மின்சாரப் பேருந்துகளை இயக்குதல் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக கலந்தாலோச்சிக்கப்பட்டன.

இந்த கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அமைச்சர் கூறியதாவது:-
இரண்டு கட்டங்களாக ஏறத்தாழ 1,500 கோடி ரூபாய் செலவில் 5,000 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு, அவற்றில் ஏறத்தாழ 3,500 பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இயக்கப்பட்டு வருகின்றன. எஞ்சியுள்ள 1,500 பேருந்துகள் விரைவில் இயக்கப்படும்.

சுற்றுச் சூழல் நலனை போற்றி பாதுகாக்கின்ற வகையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக, மின்கலன் அல்லது மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளை சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய பெருநகரங்களில் இயக்கிடும் பொருட்டு, சி40 என்கிற பன்னாட்டு அமைப்பின் மூலம் செயல்படுத்திட துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து, ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் கடன் உதவியோடு, 12,000 புதிய பிஎஸ் 6 தரத்திலான பேருந்துகளையும், 2,000 மின்சாரப் பேருந்துகளையும் வாங்கிடும் திட்டம் நடப்பு நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து விவரமான திட்ட அறிக்கை அந்நிறுவனத்தின் சார்பில் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் இது குறித்து விரைவில் அறிவிப்பார்.

நம்முடைய 8 அரசு போக்குவரத்துக் கழகங்களிலும் ஏறத்தாழ, 1,20,000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அண்மையில் 14 பொது மேலாளர்களுக்கு மேலாண் இயக்குநர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகங்களின் கடுமையான நிதி நெருக்கடியிலும், இத்தகைய பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளது, இதனை நீங்கள் அனைவரும் கருத்தில் கொண்டு, திறம்பட பணியாற்றி, பொதுமக்களுக்கு தரமான போக்குவரத்துச் சேவையினை வழங்குவதிலும், பணியாளர்களின் நலன்களில் மிகுந்த அக்கறை கொண்டு அர்ப்பணிப்புடன் பணியாற்றிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.