நியூயார்க், ஜூன் 4: அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர், வளர்ப்பு மகளை கொன்றது நிரூபணமானதால் அவருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள குயின்ஸ் நகரத்தைச் சேர்ந்தவர் சுக்ஜிந்தர் சிங். இவர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவரது மகள் அஷ்தீப் கவுர் (வயது 9). சில ஆண்டுகளுக்கு முன் ஷம்டாய் அர்ஜூன் என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்னை மணந்தார். பின்னர் மூவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிறுமி அஷ்தீப் குளியலறையில் இருந்த பாத் டப்பில் உயிரிழந்து கிடந்துள்ளார்.

போலீஸ் விசாரணையின் போது சிறுமி அஷ்தீப் தொட்டிக்குள் தவறி விழுந்து இறந்ததாக ஷம்டாய் தெரிவித்திருந்தார். ஆனால், பிரேத பரிசோதனையில் அஷ்தீப் கழுத்து நெறிக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஷம்டாய் கைது செய்யப்பட்டார்.

பின்னர் குயின்ஸ் நகர போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் குயின்ஸ் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
இதில் ஷம்டாய் மீதான குற்றம் நிரூபணமானதால் அவருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.