கொச்சி, ஜூன் 5: கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதைதொடர்ந்து தமிழக எல்லைகளில் தீவிர உஷார் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எல்லையோர சோதனை சாவடிகளில் மருத்துவ சோதனைகள் நடத்தப்படுகிறது. கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. பழம் திண்ணி வவ்வால்கள் மூலம் பரவும் இந்த கொடூர காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு தலைவலி, தசைப்பிடிப்பு, மூட்டுவலி, வாந்தி மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்படுகிறது.

கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 311 பேர் தீவிர காண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஸ்வர்தன் உடனடியாக மத்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவை சேர்ந்த நிபுணர்கள் குழுவை அனுப்பி வைத்துள்ளார். தேசிய நோய் கட்டுப்பாடு பிரிவு சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு தொடர்பு கொள்வதற்கு 011-2397 8046 என்ற தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 6 பேர் கொண்ட மத்திய நிபுணர்குழு கேரளாவில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

நிலைமையை சமாளிக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது என்பதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். இதனிடையே தமிழகத்திற்குள் நோய் பரவாமல் தடுக்க எல்லையோர பகுதிகளில் உஷார் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சோதனை சாவடிகளிலும் கேரளாவில் இருந்து வருபவர்கள் அனைவரும் பரிசோதிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.

சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனைவரும் பரிசோதிக்கப்படுகிறார்கள். பொதுசுகாதாரதுறையின், துணை இயக்குனர் பொற்கொடி கூறுகையில், அனைத்து மருத்துவமனைகளும் காய்ச்சலால் அனுமதிக்கப்படுபவர்களை கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே கூறுகையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிலர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.கோவை மாவட்டத்திலும் கேரள எல்லையோரங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. உலக சுகாதார நிலையம் வெளியிட்ட அறிக்கையின் படி, வவ்வால்கள் கடித்துவிட்டு போடும் பழங்களில் இருந்து மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் இந்த நோய் பரவுகிறது. முதன் முதலில் மலேசியாவில் உள்ள சுங்கை நிபா என்ற கிராமத்தில் இந்த காய்ச்சல் கண்டுப்பிடிக்கப்பட்டதால் நிபா வைரஸ் என்று அழைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.