சென்னை, ஜூன் 5: 9 சட்டமன்ற தொகுதி மற்றும் தேனி மக்களவை தொகுதியில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் உட்பட திமுகவின் உயர்மட்ட நிர்வாகிகள் மீது அடுத்த சில நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. சென்னை அறிவாலயத்தில் அண்மையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டார்கள்.

இதில் 9 சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து அந்தந்த மாவட்ட செயலாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்ய குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. 9 சட்டமன்ற தொகுதிகள் 8 மாவட்டங்களில் அடங்க¤உள்ளன. திருவாரூர், தருமபுரி, கோவை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடியில் இவை அடங்கி உள்ளன.

தருமபுரி மாவட்டத்தில் மட்டும் இரு சட்டமன்ற தொகுதிகளில் திமுகவுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது. தேனி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிப்பட்டு, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளில் திமுக வெற்றி பெற்ற போதிலும் மக்களவை தேர்தலில் தோல்வியடைந்துள்ளது. இது போல் தருமபுரி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற போதிலும் பாப்பி ரெட்டி பட்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுகவிடம் திமுக மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

இந்த நிலவரங்கள் குறித்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்எல்ஏக்களிடம் ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை கேட்டதாக தெரிகிறது. தற்போது அமைக்கப்பட உள்ள குழு தனது அறிக்கையை தாக்கல் செய்த உடன் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. சில தொகுதிகளில் திமுக நிர்வாகிகள் தங்களுக்கு ஒத்துழைப்பு தரவில்லை என கூட்டணி கட்சியினரும் புகார் கூறியுள்ளனர்.

2016-ல் தஞ்சை சட்டமன்ற இடைத்தேர்தலில் தோல்வி ஏற்பட்டதை தொடர்ந்து சில நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதே முறையை இப்போதும் பின்பற்றி தோல்விக்கு காரணமானவர்கள் கட்சி பொறுப்புகளில் இருந்து மீட்கப்படுவார்கள் என திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.