புதுடெல்லி, ஜூன் 5: டெல்லியில் வரும் 15-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் ஆட்சி மன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். திட்ட குழுவிற்கு மாற்றாக அமைக்கப்பட்ட நிதி ஆயோக் அமைப்பின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடியும், துணைத்தலைவராக ராஜீவ் குமாரும் உள்ளனர்.இந்த நிதி ஆயோக்கின் ஆட்சிக்குழுவில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களும், அந்தமான் துணை நிலை கவர்னரும் உள்ளனர்.

இந்த ஆட்சிக்குழுவின் கூட்டம் கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 17-ந்தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்குவது பற்றியும், மத்திய அரசின் முக்கிய திட்டங்களின் அமலாக்கம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு பதவி ஏற்றுள்ள நிலையில், முதல்முறையாக நிதி ஆயோக்கின் ஆட்சிக்குழு கூட்டம், டெல்லியில் வரும் 15-ந்தேதி நடக்கிறது.

இந்த கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்ட அனைத்து மாநில முதலமைச்சர்களும் கலந்துகொள்கின்றனர். இதன் காரணமாக இது முதலமைச்சர்கள் மாநாடாகவும் கருதப்படுகிறது. நிதி ஆயோக்கின் சிறப்பு அழைப்பாளர்களும், இதில் கலந்துகொள்கிறார்கள். இதற்கான அழைப்பு அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டு விட்டதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.