சென்னை, ஜூன் 5: மத்திய அரசு தமிழை பிறமாநிலங்களில் 3-வது மொழியாக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
முதல்வரின் கோரிக்கை சரியானது தான் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

இதனிடையே மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை கட்டாயமாக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இதன்படி தமிழ்நாடு உள்பட இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தியை கட்டாயப்படுத்தல் தொடர்பான பரிந்துறை செய்தது. இதற்கு பலத்த எதிர்ப்பு வந்த நிலையில், இதனைத் தொடர்ந்து புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தில் சில திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

அதன்படி இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தி கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் இந்தி கட்டாயம் இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டது. ஆனால் அனைத்து மாநிலங்களில் மும்மொழி கொள்கையை பின்பற்றினால், தமிழகத்தை தவிர்த்து பிற மாநிலங்களில் தமிழ் மொழியை விருப்ப மொழியாக மாணவர்கள் தேர்வு செய்ய முடியும், அதன் மூலம் தமிழ் மொழி மற்ற இந்திய மாநிலங்களில் வளர்ச்சி அடையும் என ஒரு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
தமிழை 3 ஆவது மொழியாக்குங்கள். பிற மாநிலங்களில் தமிழை 3 ஆவது மொழியாக பயிற்றுவிக்க வேண்டும். அவ்வாறு விருப்ப மொழியாக தமிழை பயிற்றுவிக்க நடவடிக்கை எடுப்பது, உலகின் சிறந்த மொழிக்கு செய்யும் சேவையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பாலகிருஷ்ணன்
இது குறித்துமார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், பிற மாநிலங்களில் தமிழுக்கு உரிய கவுரவம் அளிக்கப்பட வேண்டும் என்ற வகையில் முதலமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை வரவேற்கத்தக்கது. இதன் மூலம் நாடு முழுவதும் தமிழுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்றார்.

மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் தமிழை கட்டாய மொழியாக அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இது குறித்து ஸ்டாலின் அளித்துள்ள பேட்டியில் மேலும் கூறியிருப்பதாவது:-
மும்மொழி திட்டம் என்ற பெயரில் இந்தியை திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.
பின்னர் அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளது. அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் தமிழை கட்டாய மொழியாக அறிவிக்க வேண்டும். அதற்காக தொடர்ந்து திமுக குரல் கொடுக்கும் என நான் உறுதியாக கூறுகிறேன் என்றார்.