சென்னை, ஜூன் 5: சென்னையில் பட்டினப்பாக்கத்தில் நேற்றிரவு பைக் ரேஸில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களது பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னையில் கடந்த 5 மாதங்களில் இதுவரை விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டியதாக 37-க்கும் மேற்பட்டவர்களின் வாகன உரிமங்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.
சென்னை காமராஜர் சாலையில், கடந்த 3 நாட்களாக நள்ளிரவில் பைக் ரேஸ்கள் நடைபெற்றுவருகின்றன. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டும் பைக் ரேஸ் நடப்பதால், போலீசார் அவர்களை கைது செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 3-ம் தேதி இரவு சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசார் நடத்திய அதிரடி சோதனை நடவடிக்கையில் ஆபத்தாகவும், அதிவேகமாகவும் வாகனங்களை ஓட்டியதாக 35 வழக்குகளும், மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டியதாக 12 வழக்குகளும். இரு நபர்களுக்கு மேல் பைக்குகளில் பயணித்ததாக 10 வழக்குகளும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 157 வழக்குகள் என மொத்தம் 214 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதில், 7 கார்கள், 22 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, 12 சிறுவர்கள், அவர்களின் பெற்றோர்கள் உட்பட 19 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
நேற்றிரவு பைக் ரேஸ் நடத்துவது போன்று அதிவேகமாக பைக்குகளை ஓட்டிவந்த 2 பேரை பட்டினப்பாக்கம் போலீசார் மடக்கிபிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பைக்குள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில் அவர்கள் குரோம்பேட்டையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
கடந்த 5 மாதங்களில் மட்டும் சென்னை நகரில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டிச் சென்றவர்கள் மீது 18 ஆயிரத்து 337 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் போக்குவரத்து விதிகளை கடுமையாக மீறி வாகனங்கள் ஓட்டிச் சென்றதாக சென்னையில் 57 ஆயிரத்து 636 வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய போக்குவரத்து துறைக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
இதில் 37 ஆயிரத்து 338 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ளவர்களின் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்ய அனுப்பப்பட்ட பரிந்துரை, போக்குவரத்துத் துறையின் பரிசீலனையில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.