சென்னை, ஜூன் 5: கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அரசை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கூடங்குளம் அணுமின்நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருட்களை தற்காலிகமாக சேமித்து வைப்பதற்கான அணுக்கழிவு மையம் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகில் அமைக்கப்பட உள்ளது.

இதற்கான கருத்துக்கேட்புக் கூட்டம் அடுத்த மாதம் 10-ஆம் தேதி இராதாபுரத்தில் நடைபெறும் என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அணு உலைகள் அமைக்கப்படுவதால் அச்சத்தில் உறைந்திருக்கும் மக்களை கலவரப்படுத்தும் வகையிலான இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.

ருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து இந்திய அணுமின் கழகத்தின் சார்பில் இரு அணு உலைகளை அமைத்துள்ளன. மூன்றாவது, நான்காவது அணுமின் உலைகளை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அணுமின் உலைகளில் பயன்படுத்தப்பட்ட யுரேனியம் உள்ளிட்ட அணுசக்தி எரிபொருட்களை பாதுகாப்பாக வெகுதொலைவுக்கு கொண்டு சென்று பராமரிக்க வேண்டியது அவசியமாகும்.

இதற்காக தற்காலிக அணுக்கழிவு மையமும் பூமிக்கு அடியில் அதிக ஆழத்தில் நிரந்தர அணுக்கழிவு சேமிப்பு மையமும் அமைக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.  கூடங்குளத்தில் தற்காலிக அணுக்கழிவு மையம் அமைப்பது மிகவும் ஆபத்தானது ஆகும்.

அடிப்படையில் மத்திய, மாநில அரசுகளை நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால் தற்காலிக அணுக்கழிவு மையத்தை கூடங்குளம் பகுதியில் அமைப்பதை உடனடியாக கைவிடுவதுடன் நிறைவடையும் வரை கூடங்குளம் அணு உலைகளை தற்காலிகமாக மூட அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.