நாட்டிங்காம், ஜூன் 5: பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், விதிமீறலில் ஈடுபட்டதாக இங்கிலாந்து பவுலர்கள் ஜேசன் ராய் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 6-வது லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்யும் போது 14-வது ஓவரில் ஜேசன் ராய் கேட்ச் ஒன்றை தவற விட்டார். அப்போது அவர் தகாத வார்த்தையை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகார் உறுதியானதையடுத்து, அவருக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 15% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதே போட்டியில், இங்கிலாந்து வீரரான ஜோஃப்ரா ஆர்ச்சர் 27-வது ஓவரில் வீசிய பந்தை வைட் என நடுவர் தெரிவித்தார். இதனால், கொதித்தெழுந்த ஆர்ச்சர், நடுவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். நடுவரின் தீர்ப்புக்கு செவிக்கொடுக்காமல் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக, ஆர்ச்சருக்கும் போட்டி ஊதியத்தில் இருந்து 15% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ராய் மற்றும் ஆர்ச்சர் ஆகியோரின் மீது ஒழுங்குமுறைப் பதிவுகளில் ஒரு சஸ்பென்ஷன் புள்ளியும் சேர்க்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.