சென்னை, ஜூன் 5: இந்தியாவின் முதல் அணு உலை கழிவு கிடங்கு கூடங்குளத்தில் அமைக்கப்படும் எனவும் தெரிகிறது. இது பற்றிய கருத்து கேட்பு கூட்டத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஜூலை 10-ம் தேதி நடத்துகிறது.அணுமின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் யுரேனியம் எரிபொருளின் கழிவுகளை கொட்டுவதில் பிரச்சனை இருந்து வருகிறது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கூடங்குளத்தில் அணு உலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை சேமிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கு 2018 முதல் 2020 ஏப்ரல் வரை அவகாசம் அளித்து இருந்தது. இந்நிலையில், கூடங்குளத்தில் உள்ள இரு அணுமின் நிலையங்களிலும், அணு உலையில் இருந்து வெளியேறும் கழிவுகளை சேமிக்க முடிவெடுத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஜூலை 10-ம் தேதி பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடக்கும் என்று தெரிகிறது.
இந்த எரிபொருள் கழிவு டேங்கர்களில் நிரப்பப்பட்டு தண்ணீருக்கு அடியில் வைக்கப்படும். கைதேர்ந்த நிபுணர்களின் கட்டுப்பாட்டில் இது இருக்கும். எவர்சில்வர் ஸ்டீல் பிளேட்டுகளால் மூடப்பட்டு கசிவு ஏற்படாதவாறு பாதுகாக்கப்படும்.

தண்ணீரை குளிர்ச்சியூட்டவும், சுத்திகரிப்பு செய்யவும் மற்றும் காற்றோட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்படும். கட்டுப்பாட்டு அறை, அலாரம் அறை போன்றவையும் அமைக்கப்படும் என்பதால் இவை மிகவும் பாதுகாப்பானது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் சுனாமி போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படும் போது ஆபத்து உண்டாகுவதை தடுக்க முடியாது என்பதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.