ஜப்பான், ஜூன் 6: அச்சு அசலாக மனித வாய் போன்றதொரு பர்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டு வைரலாகிவருகிறது.

ஜப்பான் நாட்டை சேர்ந்த டிஜே ஒருவர், நாணயங்களைப் போட புதுவிதமான அதேசமயத்தில் தனித்துவமான பர்ஸ் ஒன்றை உருவாக்கி, அதன் செயல்முறை வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அச்சு அசல் மனித வாய் போன்றதொரு தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளதால் தனது புதிய படைப்புக்கு ‘மவுத் (வாய்) பர்ஸ்’ என அவர் பெயரிட்டுள்ளார்.

வாயை திறந்து நாணயங்களை வைத்துவிட்டு அப்படியே பர்ஸை மூடிவிடலாம். பின்னர், நாணயங்கள் தேவைப்படும் பட்சத்தில், பர்ஸை திறந்து தலைக்கீழாக கவிழ்த்து நாணயங்களை எடுத்துக்கொள்ள முடியும்.

மனித உதடு, பற்கள், ஈறுகள் என அனைத்தும் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது பிரமிப்பை ஏற்படுத்துவதாக இந்த வீடியோவை பார்த்த இணையதளவாசிகள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். சிலர் அருவெறுப்பாக இருப்பதாகவும், புல்லரிப்பை ஏற்படுத்துவதாகவும் கமெண்ட்ஸ் அளித்துள்ளனர். எது எப்படியோ, வாய் பர்ஸ் இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகிவருகிறது.

இந்த வீடியோவை இதுவரை 13.8 மில்லியனுக்கும் அதிகமானோர் பகிர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.