புதுடெல்லி, ஜூன் 6: தென் மேற்கு பருவமழை நாளை மறுதினம் கேரளாவில் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையமும், சென்னை ஆய்வு மையமும் அறிவித் துள்ளது. இதன் விளைவாக தமிழக எல்லையோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

6 மாதங்களாக மழையை கண்டிராத சென்னையிலும் மழை பெய்ய வாய்ப்பு ஏற்படலாம் என சில தனியார் ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கேரளாவில் ஜூன் 1-ல் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஒருவாரம் காலதாமதமாக ஜூன் 8-ந் தேதி தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது.

இந்த பருவமழை நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இயல்புக்கு சற்று குறைவாகவே பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் சிவானந்தாபாய் கூறியுள்ளார். சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட உள் மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அரபிக்கடலில் உருவாகி யுள்ள மழை மேக அமைப்பு அடுத்த இரு நாட்களில் அந்தமான் நிகோபார் தீவு பகுதிகளுக்கும், குமரி கடல் பகுதிக்கும் நகர்ந்து மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வழக்கமாக தென்மேற்கு பருவமழை காலம் 45 நாட்களாகும். இந்த ஆண்டு ஒருவாரம் தாமதமாக மழை தொடங்கு கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மாநகரில் கடந்த 6 மாதமாகவே மழை பொழிவு இல்லாமல் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழையால் மழை பெய்வதற்கான வாய்ப்பு உருவாகலாம் என சில தனியார் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று புதன்கிழமை வேலூர் மாவட்டத்தில் சில இடங்களில் 40.1 மில்லி மீட்டர் மழை பெய்திருக்கிறது. மேலும் கோவை, தருமபுரி, மதுரை, நாமக்கல், சேலம், திருத்தணி ஆகிய இடங்களிலும் மழை பெய்துள்ளது.