சென்னை, ஜூன் 6: நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவிகள் இருவர் தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்துக்கொண்ட செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது என்று திமுக தலைவர் மு.க.,ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கூறியுள்ளனர்.

நீட் தேர்வில் தோல்வி அடைந்த தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சீனிவாசன் நகரைச் சேர்ந்த வைஷ்யா, தேனி மாவட்டம் தி ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த ரிதுஸ்ரீ ஆகியோர் நேற்று தற்கொலை செய்துகொண்டனர். இவர்கள் ஏழைத் தொழிலாளி மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மாணவிகள்.

இச்சம்பவம் தங்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கூறியுள்ளனர்.

இவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், மத்திய அரசு நடத்தும் நீட் தேர்வில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் அடிப் படையில் கேட்கப்படும் வினாத்தாள், மாநில பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்துகிறது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளித்து பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.