நாகர்கோவில், ஜூன் 6: லட்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்க சென்றபோது 2 படகுகள் பழுதானதால் அதில் சென்ற 20 மீனவர்கள் நடுகடலில் தத்தளித்தனர். அவர்களை மீட்க கன்னியாகுமரி தொகுதி எம்பி. எச்.வசந்தகுமார் துரித நடவடிக்கை மேற்கொண்டார்.

இதன் காரணமாக அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனை தொடர்ந்து மீட்கப்பட்ட மீனவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எச்.வசந்தகுமார் எம்.பி, நலம் விசாரித்தார்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியிலுள்ள தூத்தூரை சேர்ந்த சிபு என்னும் மீனவர் தனக்கு சொந்தமான 2 விசை படகுகளில் 20 மீனவர்களுடன் கொச்சி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்காக கடந்த மாதம் சென்றார்.

லட்சத்தீவு பகுதியில் சிபு உடன் சென்ற மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவர்கள் சென்ற ஒரு படகின் இஞ்சின் பழுதானது, இதனால் அடுத்த படகிலுள்ள மீனவர்களுக்கு தகவல் தெரிவித்து. அந்தப் படகு மூலம் கரைக்கு கட்டியிழுத்து வந்தனர்.

அப்போது இழுத்து வந்த படகும் பழுதானது இதனால் ஆழ்கடலில் மீனவர்கள் உணவும், குடிநீரும் இல்லாமல் நடுக்கடலில் காற்றின் போக்கில் தத்தளித்தனர். இத்தகவல் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்த குமாருக்கு தெரியவந்தது.

உடனடியாக மீனவ கிராமங்களிலுள்ள தனது பிரதிநிதிகளை தொடர்பு கொண்டு உண்மை நிலவரங்களை அறிந்து இந்தியப் பிரதமர் அலுவலகத்திற்கு மீனவர்களை காப்பாற்றுவதற்கான துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு  மின்னஞ்சல் மூலம் வேண்டுகோள் விடுத்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமாரின் தகவலை அடுத்து பிரதமர் அலுவலகம் மும்பை கடலோர காவல் படைக்கு தகவல் அளித்து விக்ரம் என்ற கடற்படை கப்பலை அனுப்பி ஆழ்கடலில் தத்தளித்திருந்த மீனவர்களை மீட்டது.

பின்னர் மீனவர்களையும் பழுதான படகுகளையும் லட்சத்தீவு அருகே உள்ள மித்ரா தீவில் கரைசேர்த்தனர். பின்னர் அங்கிருந்து அழைத்துவர கொச்சியில் இருந்து விசை படகுகள் அனுப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து எச்.வசந்தகுமார் எம்பி பாதிக்கப்பட்ட மீனவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறி நலம் விசாரித்தார்.