விழுப்புரம், ஜூன் 6: மாணவியை கடத்தி சென்று கற்பழித்த இரண்டு குழந்தைகளின் தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கள்ளக்குறிச்சி அருகே கல்வராயன் மலையில் உள்ள மேல்முண்டியூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் பக்கத்து கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து முடித்துள்ளார்.

இதையடுத்து கோடை விடுமுறை முடிந்ததும், பிளஸ்-2 படிக்க பள்ளிக் கூடத்துக்கு செல்ல இருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவி அதே பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த மாதவன் மகன் இளங்கோவன்(வயது29) என்பவர், தூங்கிக்கொண்டி ருந்த மாணவியை வெங்கடாம்பேட்டைக்கு கடத்தி சென்றார். பின்னர் இளங்கோவன் அங்குள்ள தனது நண்பர் வீட்டில் மாணவியை அடைத்து வைத்து, கற்பழித்ததாக தெரிகிறது.

அதன் பின்னர் இளங்கோவன் மீண்டும் மாணவியை வீட்டுக்கு கொண்டு வந்து விட்டு விட்டார்.
இதையடுத்து நடந்த சம்பவம் பற்றி மாணவி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளங்கோவனை கைது செய்தனர்.

கைதான இளங்கோவனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.