சென்னை, ஜூன் 6: சென்னை உட்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் காற்று மாசை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- உலகளவில் காற்றுமாசுபாட்டில் முன்னணியில் உள்ள 15 நகரங்களில் 14 நகரங்கள் இந்தியாவில் உள்ளதாக உலக சுகாதார நிறுவன அறிக்கையை மேற்கோள்காட்டிசெய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

காற்றுமாசு இறப்புகள் பெரும்பாலும் இதய நோய், பாரிசநோய் மற்றும் சுவாச கோளாறு நோய்கள் மற்றும் நுரையீரல் புற்று நோயாலும் ஏற்படுகிறது. இதன் தாக்கத்தை கருத்தில் கொண்டே இந்த ஆண்டின் உலக சுற்றுச்சூழல் நாள் ஜூன் 5, 2019-ன் மைய பொருளாக காற்றுமாசு கட்டுப்பாடு உலகம் முழுக்க நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இந்தியாவில் உள்ள பெரு நகரங்களில் டில்லி, மும்பை, கொல்கட்டா போன்றவைகளை விட சென்னை மாநகரின் காற்று மாசுப்பாடு குறைந்தே காணப்படுகிறது. தமிழகத்தில் காற்று மாசு சராசரி அளவுகள் நிர்ணயிக்கப்பட்ட அளவிற்குட்பட்டே காணப்படுகின்றன. மேலும் 2.5 மைக்ரான் அளவிளான மிதக்கும் நுண்துகள்களின் ஆண்டு சராசரி அளவும் நிர்ணயிக்கப்பட்ட அளவிற்குட்பட்டே காணப்படுகின்றன.

எனினும் 10 மைக்ரான் அளவிலான மிதக்கும் நுண்துகள்களின் அளவீடுகனின் ஆண்டு சராசரி அளவுகள் நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கதிகமாக காணப்படுகிறது. பெரும்பாலும் இதற்கான காரணங்கள் சென்னை நகரில் பெருகிவரும் வாகனங்களால் வெளியிடப்பட்டு புகை மற்றும் வளர்ச்சி திட்டங்களின்பால் நடைபெறும் கட்டுமான பணிகள் ஆகியனவும் மற்றும் சாலைகளில் வாகன மற்றும் பாதசாரிகளின் பயன்பாட்டால் மறு சுழற்சியினால் ஏற்படும் துகள் மாசுகள் முக்கிய காரணங்களாகும்.

வாகனப்புகையை கட்டுப்படுத்த தமிழக அரசும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும் பல திட்டங்களை மேற் கொண்டு வருகின்றன. அவற்றில் குறிப்பாக:-பாரத் நிலை 4 தர அளவுக்குட்பட்ட வாகனங்களை மட்டுமே தமிழகமெங்கும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

பெண்சீன் குறைக்கப்பட்ட (1%), கந்தகம் குறைக்கப்பட்ட டீசல் மட்டுமே சென்னை மற்றும் தமிழகமெங்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை நகரில் புதிதாக டீசல் ஆட்டோக்கள் பதிவு செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிதாக உரிமம் வழங்க/புதுபிக்க ஆட்டோக்கள் திரவ பெட்ரோலிய வாயு மூலம் இயங்குவதற்கு மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.

வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையளவை கட்டுப்படுத்த மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன்படி அனைத்து ரக வாகனங்களும் வாகனப்புகை சான்று 6 மாதங்களுக்கொருமுறை பெறுவது கட்டாயமாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

வாகனங்களில் பசுமை எரிபொருளான எல்.பி.ஜி பயன்பாட்டை ஏற்படுத்த சென்னை நகரில் சுமார் 30 எல்.பி.ஜி நிரப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. வாகனங்களில் சி.என்.ஜி பயன்பாடு தற்சமயம் சென்னை நகரில் இல்லை. இதுவரை சி.என்.ஜி எரி வாயுவை குழாய் மூலம் எடுத்துச் செல்ல சென்னை நகரில் வசதியில்லாததால் வாகனங்களில் சி.என்.ஜி பயன்படுத்த இயலவில்லை.

எனினும் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒரு வழக்கில் சென்னை நகரில் சி.என்.ஜி பயன்பாட்டை ஏற்படுத்தும் சாத்திய கூறுகளை ஆராய உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து எண்ணெய் நிறுவனங்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மேற்கண்டவைகள் மட்டுமின்றி பொது மக்களின் பங்களிப்பு காற்று மாசு கட்டுப்படுத்த மிக அவசியம் என்பதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் பிற நிறுவனங்களுடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக தீபாவளி மற்றும் போகி போன்ற பண்டிகை காலங்களில் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் காற்று மாசு பெருமளவு குறைந்தது என்பது ஆய்வு முடிவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது,