சேலம், ஜூன் 7: சேலத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஈரடுக்கு மேம்பாலத்தின் ஒரு பகுதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக பல் வலி காரணமாக ஓய்வு எடுத்து வந்தார். தற்போது அவர் முழுமையாக குணமாகி விட்டதைத் தொடர்ந்து, கட்சி மற்றும் அரசு சார்ந்த பணிகளை கவனிக்க தொடங்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சேலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலங்களை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சேலத்திற்கு சென்றார்.

இதன்பின்னர் இன்று காலையில் சேலம் ஐந்து ரோடு சந்திப்பில் ரூ.441 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஈரடுக்கு மேம்பாலத்தின் ஒரு பகுதியாக ஏ.வி.ஆர். ரவுண்டானா முதல் ராமகிருஷ்ணா சாலை சந்திப்பு வரையில் அமைக்கப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவைத்தார்.