சென்னை, ஜூன் 7: நடிகர் சங்க தேர்தலில் திடீர் திருப்பமாக நாசர் தலைமையிலான பாண்டவர் அணியை எதிர்த்து ஐசரி கணேஷ் தலைமையிலான அணி போட்டியிடப்போவதாக கூறப்படுகிறது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வருகிற 23-ந் தேதி சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. நாசர் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். துணை தலைவர்கள் பதவிக்கு பூச்சி முருகன், கருணாஸ்¢ஆகியோர் போட்டியிடுகிறார்கள். பொதுச்செயலாளர் பதவிக்கு மீண்டும் நடிகர் விஷால் போட்டியிடுகிறார், பொருளாளர் பதவிக்கு நடிகர் கார்த்தி மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார்.

நடிகை குஷ்பு உள்பட 26 பேர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.  நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமாரும், ராதாரவியும் நீக்கப்பட்டுள்ளதால¢தாங்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவோம் என்று நாசர் தலைமையிலான அணி எதிர்பார்த்தது. ஆனால் திடீர் திருப்பமாக நடிகரும், வேல்ஸ் கல்வி குழுமத்தின் தலைவருமான ஐசரி கணேஷ் நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

இதுவரை நாசர் அணியில் இருந்த நடிகர் உதயா அந்த அணியிலிருந்து விலகி விஷாலை எதிர்த்து பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவார் என்று நடிகர் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் விஷால் அணியிலிருந்து மற்றும் பல நடிகர், நடிகைகள் ஐசரி கணேஷ் அணிக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்று தெரிகிறது.