திருவனந்தபுரம், ஜூன் 7: பிரதமரநரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆகியோர் இன்று ஒரே நாளில் கேரளா வருகிறார்கள். குருவாயூரப்பன் கோயிலில் பிரதமர் நாளை சாமி தரிசனம் செய்து துலாபார காணிக்கை செலுத்துகிறார்.  இன்று பிற்பகல் கேரளா வரும் ராகுல் காந்தி நாளை முதல் வயநாடு தொகுதியில் 3 நாள் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.

2-வது முறையாக பிரதமர¢ பதவியேற்ற பின் மோடி கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீகிருஷ்ணன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டார். நாளை அவர் குருவாயூர் கோவிலில் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக பிரதமர் மோடி இன்று இரவு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு இரவு 11.35 மணிக்கு கொச்சி விமான நிலையம் வந்து சேருகிறார். அங்கிருந்து காரில் அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்லும் அவர் இரவில் ஓய்வெடுக்கிறார்.

பின்னர் நாளை காலை 9 மணிக்கு அவர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு குருவாயூர் செல்கிறார். அங்குள்ள ஸ்ரீகிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் அவரது ஹெலிகாப்டர் இறங்குகிறது. அங்கிருந்து காரில் புறப்பட்டு குருவாயூர் கோவிலுக்கு செல்கிறார். காலை 10 மணி முதல் 11.10 மணி வரை அவர் கோவிலில் முகாமிட்டு சாமி தரிசனம் செய்கிறார். சாமி சன்னதிக்கு செல்லும் மோடி, மஞ்சள் பட்டு, கதலிப்பழம் ஆகியவற்றை காணிக்கையாக படைத்து சாமியை வழிபடுகிறார். பின்னர் அய்யப்ப சுவாமி சன்னதி, பகவதி அம்மன் சன்னதிக்கும் சென்று தரிசனம் செய்கிறார்.

தொடர்ந்து மோடி, துலாபார நேர்ச்சை நிறைவேற்றுகிறார். எடைக்கு எடையாக தாமரைப்பூ மற்றும் கதலிப்பழங்களை அவர் கொடுக்கிறார். இதற்காக 112 கிலோ தாமரைப்பூக்கள் தயார் நிலையில் வைக்கப்படுகிறது. இந்த பூக்கள் தேவைக்கேற்ப பயன்படுத்தப்படும்.n காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாடாளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு 4 லட்சத்து 31 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிபெற்றார்.

மேலும் கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் 19 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து தேர்தலில் வெற்றி அளித்த கேரள மக்களுக்கு நன்றி தெரிவிக்க இன்று (7-ந்தேதி) முதல் 3 நாட்கள் ராகுல்காந்தி கேரளாவில் ‘ரோடு ஷோ’ நடத்துகிறார். டெல்லியில் இருந்து புறப்படும் ராகுல் இன்று பகல் 2 மணிக்கு ஹரிப்பூர் விமான நிலையத்தை வந்தடைகிறார். தொடர்ந்து 3 மணிக்கு திருவல்லி பகுதியில் காங்கிரசார் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் ராகுல் பங்கேற்கிறார்.

அதன்பிறகு காளிக்காவூர் செல்லும் ராகுல்காந்தி அங்கு ‘ரோடு ஷோ’ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.