விழுப்புரம் ,ஜூன் 7: விழுப்புரம் மாவட்டத்தில் சிறுபான்மை யினர் பள்ளிகளைத் தவிர மீதமுள்ள 343 தனியார் பள்ளிகளில் 23,542 மாணவர்கள் சேர்க்கை இடங்கள் உள்ளன. இவற்றில் 25 சதவீத ஒதுக்கீடு இடங்களாக 5,978 இடங்கள் உள்ளன.

இந்த இடங்களில் மாணவர்கள் சேர்க்கைக்காக இந்த ஆண்டு 6,415 விண்ணப்பங்கள் வந்திருந்தன. அவற்றில் 5,785 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இதற்கான சேர்க்கை கடந்த 3-ம் தேதி தொடங்கிய நிலையில், ஆதரவற்றோர், எய்ட்ஸ் பாதித்தவர்களின் குழந்தைகள், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவு தொழிலாளிகளின் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளிடமிருந்து பெறப்பட்ட 91 விண்ணப்பங்களுக்கு நேரடியாக சேர்க்கை வழங்கப்பட்டது.

மீதமுள்ள இடங்களுக்கு அனைத்துப் பள்ளிகளிலும் நேற்று சேர்க்கை நடைபெற்றது. விழுப்புரம் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்வி குழுமத் தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஆர்.பாட்சா வரவேற்றார்.

ராமகிருஷ்ணா மிஷன் செயலர் பரமசுகானந்தா, கல்வித் துறை வட்டார வளமைய அலுவலர் ரம்யா, காவலர் ஆனந்தி, பள்ளி முதல்வர் சித்ரா, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்டோர் முன்னிலையில், குலுக்கல் முறையில் மாணவர்கள் சேர்க்கைக்கான தேர்வு நடைபெற்றது.