சென்னை, ஜூன். 7:  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றியுள்ள மத்திய -மாநில அரசுகளுக்கு பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ எம். விக்ரம ராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது:- தமிழக அரசு 2017 மார்ச் 22ஆம் தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு 24 மணி நேரம் கடைகள் இயங்க அனுமதிக்கலாம் என்ற அறிவிப்பினை வெளியிட்டது.

இதுநாள்வரை காவல்துறை மூலமாக ஏற்பட்ட கெடுபிடிகள் தளர்த்தப்பட்டு, வணிகர்கள் சுதந்திரமாக தங்களின் உழைப்பை இரவு பகல் பாராமல் அளித்து, அரசுக்கு வருவாய் ஈட்டி, வணிகர்கள் வளமும், நலமும் பெற இந்த அரசாணை உறுதுணையாய் இருக்கும் என்பதை கருத்தில்கொண்டும், பேரமைப்பின் நீண்டநாள் வேண்டுகோளை ஏற்றும், இன்று அரசாணையாக வெளியிட்டு இருப்பதற்கும் பேரமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தார்

தமிழக அரசின் இந்த அரசாணையினால் வெகுகாலமாக பாதிக்கப்பட்டு வந்த இரவுநேர தேநீர் கடைகள், உணவகங்கள் மற்றும் நெடுஞ்சாலைக் கடைகள் நடத்தும் வணிகர்களும் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள் என்பது நிச்சயம்.

இந்த அரசாணையின் மூலம் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் அதிகாரிகள் உரிய ஒத்துழைப்பு அளித்து, பொதுமக்களின் நலன்காக்க சிசிடி கேமராக்களை வணிகர்கள் பொருத்தி, தமிழக காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் இதன் மூலம் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.