சென்னை, ஜூன் 8: தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு இன்று தொடங்கியுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள கல்வி உரிமை சட்டப்படி, பள்ளி ஆசிரியராக பணியில் சேர டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், 23.8.2010-ம் ஆண்டுக்கு பின்னர் பணியில் சேர்ந்த அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களும் இந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு கடந்த மார்ச் முதல் ஏப்ரல் 12-ம் தேதி வரை ஆன்லைன் மூலமாக மொத்தம் 6 லட்சத்து நான்காயிரத்து 156 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கான ஹால் டிக்கெட் கடந்த மே மாதம் 26-ம் தேதி வெளியானது.

ஹால் டிக்கெட் பெற்றவர்கள் அனைவருக்கும் தகுதி தேர்வு இன்றும், நாளையும் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இன்று முதல் தாள் தேர்வும், நாளை இரண்டாம் தாள் தேர்வும் நடைபெறுகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆசிரியராக பணியாற்ற முதல் தாள் தேர்வையும், எட்டாம் வகுப்பு வரை பணியாற்ற இரண்டாம் தாள் தேர்வையும் எழுத வேண்டும்.

இந்த தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் 1,552 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. சென்னையில் மட்டும் 88 தேர்வு மையங்கள் உள்ளன. தற்போது தமிழகம் முழுவதும் டெட் தேர்வு தொடங்கி நடந்து வருகிறது.