திருவனந்தபுரம், ஜூன் 8: கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூரப்பன் திருக்கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்து எடைக்கு எடை தாமரை மலர்களை அளித்து துலா பார வழிபாடு நடத்தினார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பிஜேபி அமோக வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. இதனைத் தொடர்ந்து 2-வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் கேரளா மாநிலத்துக்கு வருகை தந்த பிரதமர் மோடி, அங்குள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ குருவாயூரப்பன் திருக்கோவிலுக்கு சிறப்பு வழிபாடு நடத்த அவர் இன்று காலை கொச்சி வந்தடைந்தார்.

கொச்சி விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடியை அம்மாநிலத்தின் கவர்னர் சதாசிவம், மத்திய அமைச்சர் முரளிதரன், மற்றும் பிஜேபி மூத்த தலைவர்கள் வரவேற்றனர்.

கொச்சியில் இருந்து திருச்சூர் வழியாக குருவாயூர் கோவிலுக்கு தற்போது வந்தார். அவருடன் கவர்னர் சதாசிவமும், பிஜேபி மூத்த தலைவர்களும் வருகை தந்துள்ளனர்.

குருவாயூரப்பன் கோயிலில் தனது எடைக்கு எடை துலாபாரத்தில் தாமரை மலர்களை கொடுக்க உள்ளார். இதற்காக 120 கிலோவுக்கும் அதிகமான தாமரை பூக்கள் அங்கு எடுத்து வைக்கப்பட்டுள்ளன.

பிரதமர் மோடியின் வருகையையொட்டி குருவாயூரப்பன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அவர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர், குருவாயூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார் என தெரிகிறது.