சென்னை, ஜூன் 8: சென்னை மாநகராட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 10-ந் தேதி வெளியிட்டப்படுகிறது. மண்டல மற்றும் வார்டு அலுவலகங்களில் பொதுமக்கள் இதனை பார்வையிடலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உள்ளாட்சித் தேர்தல் இடஒதுக்கீடு பட்டியல் தொடர்பான அரசாணையை தமிழக அரசு அண்மையில் பிறப்பித்தது. இதில், 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதுடன், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு மக்கள் தொகை அடிப்படையில் வார்டுகள் ஒதுக்கப்பட்டன. சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 200 வார்டுகளில் 105 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியில் ஆண் வாக்காளர்களுக்கு 78 வாக்குச் சாவடிகளும், பெண் வாக்காளர்களுக்கு 78 வாக்குச் சாவடிகளும், அனைத்து வாக்காளர்களுக்காக 5,564 வாக்குச் சாவடிகள் என மொத்தம் 5,720 வாக்குச் சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த வரைவு வாக்குச் சாவடி பட்டியல் திங்கள்கிழமை (ஜூன் 10) முதல் மாநகராட்சி ஆணையர் அலுவலகம், மண்டல அலுவலகங்கள், அனைத்து வார்டு அலுவலகங்கள், வாக்காளர் பதிவு அலுவலர், வருவாய் அலுவலர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வார்டு எல்லைகளை மாற்றியமைக்கும் செய்யும் பணி ஏற்கனவே நிறைவடைந்துவிட்டது. 1400 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி வீதம் அமைக்கப்படும் என தெரிகிறது.