சேலம், ஜூன் 8: உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். அதிமுகவில் கருத்து வேறுபாடுகள் எதுவும் இல்லை என்றும் பலம் பொருந்திய கட்சியாக விளங்கி வருகிறது என்றும் அவர் கூறினார்.

சேலத்தில் ஆவணி பேரூர் பகுதியில் சரபங்கா நதியின் குறுக்கே கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் மற்றும் அரசு அலுவலக கட்டிடங்களை முதல் அமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
இதன்பின் அவர் பேசும்பொழுது, சரபங்கா நதியின் குறுக்கே பாலம் திறக்கப்பட்டதால், ஒன்றரை கி.மீட்டர் சுற்றி சென்ற மருத்துவமனைக்கு தற்போது இரண்டு பர்லாங் கடந்தால் போதும். ரூ.1.90 கோடி மதிப்பில் பாலம் கட்டப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டு உள்ளது.

பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு தயாராக உள்ளது. சேலம் ஜலகண்டாபுரம் பகுதியில் புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மக்கள் வைக்கும் கோரிக்கையின்படியே பாலங்கள் கட்டப்படுகின்றன. திறப்பு விழாவில் குற்றச்சாட்டு கூறவேண்டுமென்ற நோக்கத்திலேயே தி.மு.க.வினர் கலந்து கொண்டுள்ளனர். சேலத்தில் தேவையில்லாத இடத்தில் பாலம் கட்டப்பட்டு உள்ளது எங்கே? என தி.மு.க. எம்.பி.க்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
மேம்பால பணிகள் அனைத்தும் உடனடியாக முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்படுகிறது. யாருக்கும், எவ்வித பிரச்னையும் இன்றி பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. சேலத்தில் கட்டப்பட்ட புதிய ஈரடுக்கு மேம்பாலத்தினால் மக்களின் போக்குவரத்து சிரமம் குறைந்திருக்கிறது. இதனால் 35 சதவீத போக்குவரத்து நெரிசல் குறையும். மாணவர்கள், நோயாளிகள் அதிக பலனடைவார்கள். நில எடுப்பினால் மக்கள் பாதிக்கப்படாத வகையில் பாலங்கள் கட்டப்படுகின்றன.
தேர்தலின்பொழுது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப் பட்டு உள்ளன. உயிரிழப்பினை தடுக்க, எரிபொருள் சிக்கனம், சுற்றுச்சூழலை பாதுகாக்க மத்திய அரசு 8 வழிச்சாலை திட்டத்தினை கொண்டு வந்துள்ளது. அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவை என்று மதுரையில் ராஜன் செல்லப்பா கூறியிருக்கிறாரே என்று செய்தியாளர்கள் கேட்ட போது, அந்த செய்தியை நான் பார்க்கவில்லை. அதை பார்த்த பிறகு தான் கருத்து சொல்ல முடியும் என்று முதலமைச்சர் கூறினார்.
அதிமுக தொண்டர்களால் ஆளப்படுகிற கட்சி என்றும் அவர் கூறினார். அ.தி.மு.க.வில் கோஷ்டி பூசல் இருப்பதாக கூறப்படுகிறதே என்று கேட்ட போது, அது தவறான தகவல் என்றார். அ.தி.மு.க. பலம் பொருந்திய கட்சியாக உள்ளது. அ.ம.மு.க.விற்கு சென்றவர்கள் அ.தி.மு.க.விற்கு படிப்படியாக திரும்பிக் கொண்டிருக்கின்றனர் என அவர் கூறியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக இருக்காது, இந்த ஆட்சி ஆறு மாதம் நீடிக்குமா என்று கேள்வி எழுப்பினார்கள்.
ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த ஆட்சி தொடர்ந்து நீடித்து வருகிறது. அதன் முழுமையான காலத்தை இந்த ஆட்சி நிறைவு செய்யும். அது மட்டுமல்ல 2012-ம் ஆண்டிலும் ஜெயலலிதாவின் ஆட்சி அமையும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். தேர்தல் தேதி குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்று கேள்வி ஒன்றுக்கு முதல்வர் பதிலளித்தார்.