லண்டன், ஜூன் 8: மழைக்காரணமாக பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டதையடுத்து, அந்த நேரத்தை பயன்படுத்தி, பிரிட்டனுக்கான இந்திய தூதரக அதிகாரியை சந்தித்துள்ளனர், இந்திய கிரிக்கெட் அணியினர்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 30-ம் தேதி தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. போட்டிகள் அல்லாத எஞ்சிய நாட்களில் பயிற்சியில் ஈடுபடும் கிரிக்கெட் அணியினர், இடையிடையே பொழுதுப்போக்கு மற்றும் பயனுள்ள விஷயங்களுக்கு சற்று நேரம் ஒதுக்கி செலவிட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இங்கிலாந்தில் தொடர் மழை பெய்துவருவதால், நேற்று நடைபெறவிருந்த இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி டாஸ் கூட போடமுடியாமல் முற்றிலுமாக கைவிடப்பட்டது. இதேபோல், அனைத்து அணி வீரர்களின் பயிற்சிகளும் தடைப்பட்டுள்ளன.

இந்த நேரத்தை பயனுள்ள விதத்தில் செலவிக்கு நோக்குடன் இந்திய அணி வீரர்கள், பிரிட்டனுக்கான இந்திய தூதரகம் சென்றுள்ளனர். அங்கு இந்திய தூதர் ருச்சி கனஷியாமை சந்தித்தனர். பின்னர், லண்டனில் உள்ள ருச்சியின் வீட்டிற்கு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்கள் சென்றனர். வீரர்களுக்கு அங்கு ருச்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ருச்சியின் வீட்டில் ருசியான விருந்தும் அளிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஒரே மாதிரியான உடையில் சென்ற இந்திய வீரர்கள் அங்கு, ருச்சியுடன் குழுப்புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இது குறித்த புகைப்படங்களை இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.