பிரெஞ்சு ஓபன்:12-வது முறையாக இறுதிப்போட்டியில் நடால்

விளையாட்டு

பாரிஸ், ஜூன் 8: ரோஜர் ஃபெடரரை வீழ்த்தி, பிரெஞ்சு ஓபன் தொடரில் நடால் 12-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்றுவருகிறது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின்கீழ் நடந்த அரையிறுதியில் தரவரிசையில் 3-ம் இடத்தில் உள்ள ரோஜர் ஃபெடரரை வீழ்த்தி, 2-ம் நிலை வீரரும் பிரெஞ்சு ஓபன் மன்னனுமான ரபெல் நடால் வெற்றிக்கண்டார்.

இதன்மூலம், 12-வது முறையாக நடால் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார். முன்னதாக விளையாடிய 11 இறுதிப்போட்டிகளிலும் நடால் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.  இதனிடையே, மற்றொரு அரையிறுதிப்போட்டியில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்- ஆஸ்திரியாவின் டொமினிக் தியம் ஆகியோர் மோதினர். ஆனால், மழைக்காரணமாக ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடக்கவிருக்கும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி-செக்குடியரசின் மார்கெடா வான்ட்ரோசோவா ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகின்றனர். பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி இன்று மதியம் 3 மணிக்கும், ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி நாளை மதியம் 3 மணிக்கும் நடைபெற உள்ளது, குறிப்பிடத்தக்கது.