மதுரை, ஜூன் 8: அதிமுக பொதுக்குழுவை கூட்ட வேண்டுமென ராஜன்செல்லப்பா எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.  மதுரை வடக்கு தொகுதி அதிமுக சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜன்செல்லப்பா இன்று மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:- அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேவை. தற்போது யாரிடம் அதிகாரம் இருக்கிறது என்பதே தெரியவில்லை. எனவே செயற்குழு மற்றும் எம்எல்ஏக்கள் ஆலோசனை நடத்தி ஆலோசிக்க வேண்டும்.

தலைமை பொறுப்பை யார் வகிக்க வேண்டும் என்பது குறித்து பொதுக்குழுவை கூட்டி ஆலோசிக்க வேண்டும். தற்போது தலைமையில் உள்ள இருவருமே ஜெயலலிதாவால் அங்கீகாரிக்கப்பட்டவர்கள் தான் என்றாலும் அவர்களில் ஒருவரை பொதுச்செயலாளராக நியமிக்கலாம். நான் சொல்லும்¢கருத்துக்கள¢ கட்சியில் பிரச்சனையை ஏற்படுத்துவது ஆகாது. எந்த எம்எல்ஏவும் அதிமுகவை விட்டு போக முடியாது. சின்ன சின்ன பிரச்சனைகளால் திமுக எந்த பலனும் அடைய முடியாது.

தினகரன் ஒரு மாயை என்பது நடந்து முடிந்த தேர்தலில் உறுதியாகி விட்டது. அவரால் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் பலமுறை அமைச்சரவையை மாற்றி அமைத்திருப்பார். அதுபோல் இப்போது செய்ய முடியவில்லை.  தேனி தொகுதி எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரவீந்திரநாத், ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அதேபோல் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற 9 எம்எல்ஏக்களும் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று வெற்றியை காணிக்கையாக்கி இருக்க வேண்டும்.