சென்னை, ஜூன் 8: நடிகர் சங்க தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. இந்த தேர்தலில் நாசரை எதிர்த்து பாக்யராஜ் போட்டியிடுகிறார். விஷாலை எதிர்த்து ஐசரி கணேஷ் போட்டியிடுகிறார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜா அண்ணாமலைபுரம் எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் இந்த தேர்தல் 23-ம் தேதி நடைபெறுகிறது.
இதில் தற்போது உள்ள நாசர் தலைமையிலான பாண்டவர் அணி மீண்டும் போட்டியிடுகிறது. இவர்களை எதிர்த்து புதிய அணி உருவாக்கப்பட்டுள்ளது. நடிகரும், இயக்குனருமான கே.பாக்யராஜ் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். விஷாலை எதிர்த்து பொதுச்செயலாளர் பதவிக்கு நடிகரும், வேல்ஸ் குழும தலைவருமான ஐசரி கணேஷ் போட்டியிடுகிறார். அதேபோல் துணைத்தலைவர்களாக நடிகர் உதயாவும், நடிகை குட்டி பத்மினியும் களமிறங்குகின்றனர்.
பொருளாளர் பதவிக்கு இந்த அணி சார்பில் யாரையும் நிறுத்தவில்லை. நடிகர் கார்த்தி பொருளாளர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுகிறார். இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. வரும் 10-ம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம். மனுக்களை வாபஸ் பெற 14-ம் தேதி கடைசியாகும். 23-ம் தேதி அன்று தேர்தல் நடைபெற உள்ளது.