சென்னை, ஜூன் 8: கல்லூரி மாணவி திலகவதி கொலை வழக்கில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் டி. பவழங்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுந்தரமூர்த்தியின் மகள் திலகவதி. சென்ற மே 8 ம் தேதி வீட்டிலிருந்தபோது, பேரளையூரைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தியதாக, அவரது மைத்துனர் மகேந்திரன் கூறியுள்ளார்.

திலகவதியை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மரணம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இந்நிலையில், விசாரணை அதிகாரி தன்னுடைய விசாரணையை சுதந்திரமாகவும், நியாயமான முறையில் மேற்கொள்ளவில்லை. விசாரணை அதிகாரி குற்றவாளிக்கு சாதகமாக செயல்படுகிறார்.

சாட்சிகளையும் மற்றும் வாக்குமூலங்களையும் குற்றவாளிக்கு சாதகமாகவே கொண்டு செல்வதால், கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலைய வழக்கை சிபிசிஐடி அல்லது சுதந்திரமான வேறு அமைப்பிற்கு விசாரணையை மாற்ற வேண்டும் என திலகவதியின் தந்தை சுந்தரமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு அரசு அளிக்கும் இடைக்கால இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும்.

இதுவரையிலான விசாரணை தொடர்பான விபரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, திலகவதி மரணம் தொடர்பான வழக்கில் மேற்கொண்ட விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், இழப்பீடு வழங்குவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 21ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.