சென்னை, ஜூன் 8: நகரின் இருவேறு இடங்களில் இன்று அதிகாலை நேர்ந்த சாலை விபத்தில் இரு வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செம்மஞ்சேரியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 23), இவர் தனது நண்பர் அவினாஷ் (வயது 23) உடன் பைக்கில் சென்னையில் இருந்து செம்மஞ்சேரி நோக்கி பைக்கில் சென்றுக்கொண்டிருந்துள்ளார்.

ஸ்ரீதர் பைக் ஓட்டி செல்ல, அவினாஷ் பின்னால் அமர்ந்தபடி சென்றுள்ளார். அப்போது, செம்மஞ்சேரி அருகே இருந்த சாலை தடுப்பின் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில், அவினாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த ஸ்ரீதருக்கு சென்னை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இது குறித்து, கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதேபோல், கோயம்பேடு-திருவேற்காடு செல்லும் வழியில், மதுரவாயல் அருகே இன்று அதிகாலை 2.30 மணிக்கு சென்றுக்கொண்டிருந்த பைக் மீது, பின்னால் வந்த சரக்கு லாரி மோதி விபத்து நேர்ந்தது.

இதில், பைக்கில் பயணித்த விஜய் (வயது 18) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருவேற்காடு அன்னை நகரை சேர்ந்த கோகுல் பரத் (வயது 22) மற்றும் சுரேந்தர் (வயது 22) ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இது குறித்து, கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.