சென்னை, ஜூன் 8: வாகன ஆய்விற்கு கட்டுப்படாமல், அதிவேகத்தில் சென்ற பைக்கை, மற்றொரு பைக்கில் பின்தொடர்ந்த போக்குவரத்து காவலர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.  சைதாப்பேட்டை போக்குவரத்து உதவிஆய்வாளர் ஜெகன் (வயது 46). இவர், சைதாப்பேட்டை சிக்னல் அருகே வாகன ஆய்வு நடத்தும்போது, வேகமாக வந்த பைக்கை நிறுத்த முற்பட்டுள்ளார். ஆனால், அந்த பைக் நிற்காமல் சென்றுள்ளது.

இதனையடுத்து, பின்னால் வந்த கபிலேஷ் என்பவரிடம் பைக்கில் லிப்ட் கேட்டு தப்பியோடிய பைக்கை பின்தொடர்ந்துள்ளார், ஜெகன்.  செல்லும் வழியில், சாலையை கடக்க முயன்றவர் மீது எதிர்பாராதவிதமாக கபிலேஷின் பைக் மோதியது. இதில், கபிலேஷ், காவலர் ஜெகன் மற்றும் சாலையை கடக்க முயன்ற மெர்க்குரியன் (வயது 39) ஆகிய 3 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்த மூவரும் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இது குறித்து, கிண்டி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.