சென்னை, ஜூன் 8: தேனாம்பேட்டை, டி.எம்.எஸ் வளாகத்தில் நடந்த விழாவில் தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டத்துடன்  ரூ. 2857 கோடி கடனுதவி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை உலக வங்கி குழுவினர் அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கரிடம் வழங்கினர்.

ஒப்பந்தத்தை பெற்றுக்கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:  மருத்துவத் துறையில் உயர்தர மருத்துவ சேவைகளை வழங்குவதில் மட்டுமல்லாது, மிகச் சிறந்த மனித வளம் மற்றும் கட்டமைப்பை ஏற்படுத்தி தருவதிலும் இந்தியாவிலேயே ஒரு முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.

தமிழ்நாடு அரசு 2019 முதல் 2024ஆம் ஆண்டு வரை ரூ.2857.003 கோடி மதிப்பீட்டில் உலக வங்கி நிதிஉதவியுடன் தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம் என்ற புதிய திட்டம் மேற்கொள்ளப் படவுள்ளது. இத்திட்டத்திற்கான உலக வங்கியின் பங்கு இந்திய ரூபாய் மதிப்பில் 1999.902 கோடிகள் (அமெரிக்க டாலரில் 287மில்லியன்கள்) தமிழ்நாடு அரசு 857.101 கோடிகள் கூடுதலாக முதலீடு செய்ய உள்ளது.

உலக வங்கி இத்திட் டத்தினை செயல்படுத்த வேண்டிய நிதியினை நல்க ஒப்புக்கொண்டு 19.03.2019 அன்று சுகாதார சீரமைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது.
4.06.2019 அன்று புதுடெல்லியில் இந்திய அரசின் சார்பில் நிதி அமைச்சகத்தின் பொருளாதார துறை சார்பாக சமீர் குமார் காரே, தமிழக அரசின் சார்பில் சுகாதார துறை செயலர் டாக்டர் பீலா ராஜேஷ் மற்றும் உலக வங்கி சார்பில் இஷாம் அப்டோ, இயக்குநர் கடன் உதவி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

சுகாதார திட்ட இயக்குநர் கிரண் குராலா, தமிழ்நாடு சுகாதார திட்டம், மரு. செல்வவிநாயகம், முனைவர் ரிபாத் ஹாசன் பங்கேற்றனர்.  அரசு மருத்துவமனைகளில் ஏற் கனவே உள்ள விபத்து காய சிகிச்சை மையங்களின் செயல்பாடுகள் மேம் படுத்தப்படும். தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மற்றும் வட்ட மருத்துவமனைகள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் வழியாக மேற்கொள்ளப்படும்.

இத்திட்டத்தினை செயல்படுத்தினால் வளர்ந்த நாடுகளுக்கு இணையான உயர்தர நவீன சுகாதார சேவைகளை வழங்கும் இலக்கை தமிழ் நாடு அடைய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.