திருவள்ளூர், ஜூன்,8: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக தனியார் நிறுவன ஊழியர்க்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. திருவள்ளூர் அடுத்த பாண்டூர் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது38). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு மனைவியும் நான்கு குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு ராஜ்குமார் அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியில் சொன்னால் அருகில் உள்ள கிணற்றில் தள்ளி கொலை செய்துவிடுவேன் என்று சிறுமியை அவர் மிரட்டி உள்ளார்.

இது குறித்து அந்த சிறுமி தன்னுடைய பெற்றோரிடம் கூறியுள்ளார். சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜ்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் அரசு தரப்பு வக்கீல் தனலட்சுமி வாதாடினார்.

இதில் ராஜ்குமார்மீது குற்றம் நிரூபிக்கப் பட்டதை தொடர்ந்து பெர்னாட்ஷா ராஜகுமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ. 4 லட்சம் இழப்பீடு தொகை வழங்கவும் பரிந்துரை செய்தார்.